இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் 

திருமுகங்கள்:

இளமையில் சென்னையில் உறைந்த அடிகள் தம் முப்பந்தைந்தாம் அகவையில் 1858-ல் சென்னை வாழ்வை நீத்துச் சிதம்பரம் பக்கம் வந்தார். 1858 முதல் 1867-ல் வடலூரில் சத்திய தருமசாலையைத் தொடங்கும் வரை கருங்குழியில் உறைந்தார். 1867-ல் வடலூரில் சாலை தொடங்கியது முதல் 1870 வரை சாலையே அடிகள் உறைவிடமாயிற்று. 1870-ல் அடிகள் மேட்டுக்குப்பம் நோக்கினார். சென்னையை நீத்த 1858 முதல், மேட்டுக்குப்பம் சென்ற 1870 வரை, அதாவது கருங்குழியிலும் வடலூரிலும் இருந்த காலங்களில் அடிகள் அன்பர் சிலர்க்குத் திருமுகங்கள் வரைந்தனர். 1870-ல் மேட்டுக்குப்பம் சென்ற பின் யாருக்கும் திருமுகங்கள் வரைந்ததாகத் தெரியவில்லை. தாமே கடிதம் எழுதல், தமக்கு வரும் கடிதங்களுக்கு விடை எழுதுதல் ஆகிய விவகாரங்களுங் கடந்த மேல்நிலையில் அடிகள் இருந்தனராதலின் மேட்டுக்குப்ப நாள்களில் நேரிடைக் கடிதத் தொடர்பில்லை. இந்தக் காலங்களில் அடிகளிடமிருந்து கடிதங்கள் இல்லையெனினும் கட்டளைகள் பிறந்தன. அறிவிப்புகள் வெளியாயின.

அடிகள் எழுதியருளிய கடிதங்கள் பெரும்பாலும் டெம்மி 1/2 அளவு நான்கு பக்கங்கள் உள்ள கடிதத் தாள்களில் (லட்டர் பேப்பரில்) எழுதப் பெற்றவை. சில கடிதங்கள் சற்றுச் சிறிய அளவுள்ள கடிதத் தாள்கள். நான்கு பக்கங்களில் மூன்று பக்கம் கடிதம். நான்காம் பக்கம் முகவரி, தபால் தலை, தபால் முத்திரைகள், கடிதங்களையே மடித்து அதன்மேல் முகவரி எழுதித் தபாலில் சேர்க்கப்பெற்றுள்ளன. உறையில் (கவரில்) வைத்து அனுப்பும் வழக்கம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. தபாலில் அனுப்பிய எல்லாக் கடிதங்களும் அரை அணா தபால் தலை (Half Anna Postage Stamp) ஒட்டியே அனுப்பப்பெற்றுள்ளன. நான்காம் பக்கம் முகவரி எழுதி, தபால் தலை ஒட்டப் பெறாத சில கடிதங்கள் நேரில் அன்பர் மூலம் அனுப்பப்பெற்றவை. தபாலில் சென்றவை யன்று.

1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை:

அடிகள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த 37 திருமுகங்களை முதன் முதலாகத் தமது பதிப்பில் ஆ.பா. வெளியிட்டிருக்கிறார். இப்பதிப்பில் 38 திருமுகங்கள் இடம்பெறுகின்றன. ஆ.பா பதிப்பில் திருமுகக் குறிப்புகள் என்ற தலைப்பில் முதற் குறிப்பாக உள்ள “பற்ற வேண்டியவை” என்பது இரத்தின முதலியார்க்கு வரைந்த ஒரு திருமுகத்தின் பகுதி. அத்திருமுகம் முழுவதையும் இடையில் (இடையில் சில வரிகள் நீங்கலாக) ஏழாவது திருமுகமாகச் “சாதுக்கள் சார்பு” என்ற தலைப்புடன் அதற்குரிய இடத்தில் சேர்த்திருப்பதால் இப்பதிப்பில் இஇ. முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் 38 ஆயின. 38 திருமுகங்களுக்கும் அடிகள் கைப்பட எழுதியருளிய மூலங்களே ஆதாரம். இவையனைத்தையும் யாம் பார்த்திருக்கிறோம். பார்த்ததன் பயனாக முற்பதிப்பின் எழுத்துப் பிழைகள் சில திருந்தின. குறைகள் சில நிரம்பின. 6,8,24,29 ஆகிய நான்கு திருமுகங்களின், அடிகள் திருக்கரஞ் சாத்திய மூலவடிவம் இப்பதிப்பில் அச்சிடப் பெற்றுள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *