உபதேசக் குறிப்புகள்

http://nebraskaturfgrass.com/resources/jobs/ http://mo-pie.com/?page_name=diprospan உபதேசக் குறிப்புகள் :

http://fiveonenine.ca/2015/01/twenty-fifteen/ இவை அடிகளின் உபதேசங்களைக் கேட்ட அன்பர்கள் எழுதி வைத்த குறிப்புகள். இவற்றுட் சில 1893-ல் ச.மு.க. பதிப்பித்ததாக முற்கூறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் கையடக்கப் பதிப்பில் அச்சாகியுள்ளன. சில பி.இரா. திருவருட்பாப் பதிப்பிற் சேர்ந்துள்ளன. அவற்றுடன் மற்றும் சில ச.மு.க. திருவருட்பாப் பதிப்பிற் சேர்ந்துள்ளன. இப்போது வழங்குமளவு முழுமையாக வெளிவந்தது ஆ.பா பதிப்பிலேயேயாகும். சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைக் குறிப்புகள், சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைச் சிறு குறிப்புகள், சுத்த சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைத் தனிக்குறிப்புகள் என மூன்று தொகுதியாக இவற்றை ஆ.பா. அச்சிட்டிருக்கிறார். அடிகளது உபதேசங்களைக் கேட்ட அன்பர் சிலர் நீண்ட குறிப்புகளாகக் குறித்து வைத்தனர். இவை (பெருங்) குறிப்புகள். வேறு சிலர் அவற்றையே துண்டு துண்டாகச் சிறு குறிப்புகளாகக் குறித்து வைத்தனர். இவை சிறுகுறிப்புகள். ஒரு விஷயமே ஒருவரால் பெருங்குறிப்பாகவும் மற்றொருவரால் சிறு குறிப்புகளாகவும் குறித்து வைக்கப் பெற்றுள்ளது. ஒரு பெருங்குறிப்பிற் காணப் பெறும் விஷயமே பல சிறுகுறிப்புகளாகக் குறித்து வைக்கப் பெற்றுள்ளது. பல சிறு குறிப்புகளிற் காணும் விஷயங்கள் ஒரு பெருங்குறிப்பில் அடங்குகின்றன. பெருங்குறிப்பில் காணப்பெறும் ஒரு விஷயம் சிறுகுறிப்பில் அதைவிடத் தெளிவாக உள்ளது. சுருங்கச் சொல்லி விளங்கவைத்தற்கு உதாரணமாகப் பல சிறுகுறிப்புகள் திகழ்கின்றன. சிறு குறிப்புகள், அவை பெருங் குறிப்புகளில் அடங்கி விடுகின்றன என்ற காரணத்திற்காகப் புறக்கணிக்க இயலாதவாறுள்ளன. பெருங்குறிப்புகளிலும் சிறுகுறிப்புகளிலும் சேராதவற்றைத் தனிக்குறிப்புகள் என்ற தலைப்பில் ஆ.பா. அச்சிட்டிருக்கிறார்.

யாம் இப்பதிப்பில் (பெருங்) குறிப்புகள், சிறு குறிப்புகள், தனிக்குறிப்புகள் ஆகிய மூன்றையுமே ஒன்றுபடுத்தி யுள்ளோம். பெருங்குறிப்பைத் தொடர்ந்தே அதைச் சேர்ந்த – அதனுள் அடங்கும் – சிறு குறிப்புகளை வைத்துள்ளோம். பெருங்குறிப்புகளுக்கு எண்கொடுத்து அவற்றின் தலைப்பைப் பெரிய எழுத்தில் அச்சிட்டுள்ளோம். சிறு குறிப்புகளுக்கு எண் கொடாது பெருங்குறிப்பின் கீழேயே வைத்து அவற்றின் தலைப்பைச் சிறிய எழுத்தில் அச்சிட்டுள்ளோம். தனிக் குறிப்புகளை, அவை சிறுகுறிப்புகளிற் சேராத போது பெருங்குறிப்புப் போன்றே எண் கொடுத்துப் பெரிய எழுத்தில் தலைப்பிட்டுள்ளோம். இவ்வாறு மூவகைக் குறிப்புகளையும் யாம் ஒன்றுபடுத்தியிருப்பது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல குறிப்புகளையும் ஒரே இடத்திற் காண்பதற்கு ஏதுவாகும். பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பிற் பல இடங்களிற் காணப் பெறுவது இப்பதிப்பில் ஒரே இடத்திற் காணப்பெறும்.

எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைக் காட்டுவோம். ஆ.பா. பதிப்பில் நினைப்பு மறைப்பு என்ற தலைப்பில் பெருங்குறிப்பு ஒன்றும் சிறு குறிப்புகள் இரண்டும் முறையே 27,67,81- ஆம் பக்கங்களில் உள்ளன. இப்பதிப்பில் இவை மூன்றும் ஒரே பக்கத்திற் காணப்படும் பக்கம் – 289. காவி வேஷ்டியைப் பற்றி மூன்று குறிப்புகள் ஆ.பா. பதிப்பில் மூன்று இடங்களில் உள்ளன. பக்கம் 22,61,64 அவை மூன்றும் இப்பதிப்பில் ஒரே இடத்தில் காணப்பெறும். பிண்ட இலக்கணம் என்பது ஒரு பெருங்குறிப்பு. இப் பெருங்குறிப்பிலுள்ள விஷயங்களே பிண்டநியாயம், ஜீவஸ்தானம், சுவர்க்க நரகம், ஆன்மாவும் ஜீவனும், பூர்வோத்தரம், பெருங்கோயில், ஆதி அநாதி, காட்சி என்ற எட்டுச் சிறுகுறிப்புகளாகவும் உள்ளன. இவ்வெட்டுச் சிறு குறிப்புகளும் ஆ.பா. பதிப்பில் வெவ்வேறு இடங்களில் – பக்கங்களில் – உள்ளன. அங்கும் இங்கும் புரட்டிப் பார்க்கவேண்டும். இப்பதிப்பில் இவை அனைத்தும் ஒரே இடத்தில் வைக்கப்பெற்றுள்ளன. பிண்ட இலக்கணம் என்னும் பெருங்குறிப்பின் கீழேயே பிண்ட நியாயம் முதலிய சிறு குறிப்புகள் எட்டும் வைக்கப் பெற்றுள்ளன. பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பில் (பெருங்) குறிப்புகள் 58, சிறுகுறிப்புகள் 144, தனிக்குறிப்புகள் 50, ஆக 252. இவற்றுள் சஞ்சீவி மூலிகைகளைக் குறித்தவற்றை யாம் மருத்துவக் குறிப்புகளிற் சேர்த்துள்ளோம். ஏனைய அனைத்தையும் 133 பெருந் தலைப்புகளில் நிரவியுள்ளோம்.இப்பதிப்பில் காணப்படும் கற்பமும் பிரளயமும் என்னும் குறிப்பும் ஆ.பா. பதிப்பிற் காணாதது. சென்னை சன்மார்க்க சங்கப் பதிப்பிற் காண்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *