தொழுவூர் வேலாயுத முதலியார் நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய “திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி”


திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை – நூல் – 

திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி

 

போற்றிமால் அயன்மறை புகலுறும் புகலே!
புண்ணியத் தவங்கள்செய் புண்ணியப் பயனே!
தோற்றருஞ் சிவபரஞ் சோதியே! சுடரே!
சுடரவன் குணகடல் தோன்றினன், அரசே!
மாற்றரும் வல்லிருள் புலர்ந்தது; கழல்கள்
வழிபடும் தொண்டர்கள் வாய்தலின் நின்றார்;
ஈற்றொடு முதல் இல்லா அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 1.

ஆணவவல் இருள் படலங்கள் கிழிய
ஐந்தொழில் கிரண சத்திகள்தமை விரித்து
மாணுறு திருவருள் கதிரவன் அன்பாம்
வாரிவந் தெனக் குணகடல் அகட்டெழுந்து
காணுற ஞாயிறும் எழுந்தது; இங்குஎங்கள்
கலியிருள் ஒதுங்கிடக் கற்பகக் கனியே!
ஏணுடை ஒற்றி எம் அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 2.

கேவலத் தனிஇருள் கெட, ஒருசகலக்
கிளர்மதி மழுங்க வெவ்விடய ஞானப்பந்
தாவற, முழுதுணர்கதிர் புடை பரப்பித்
தண்ணருட் பானுவில் சண்ட வெங்கிரணன்
பூவுறும் உயிர்த்தொகை இன்புற உதயம்
பொருந்தினன்; புள் அலம்புற்றன; புலரி
ஏவரும் தொழ வந்தார்; அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 3.

மலஇருளற வருமாண்பு முன்னு ணர்த்தும்
வண்கொடித் தேவரின் நண்புறு கோழி;
நிலவிய குருகினம்; அலம்பின சங்கம்;
நீடுநின் றார்த்தன; சின்னமும் முழங்கும்
குலஅடித் தொழும்பர்கள் குரைகழற் பணிகள்
குயிற்றுநர் குறிவழிநின்றார் வேட்டு அங்கு
இலகருட் பிரகாச! எழில்தணி கேச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 4.

முதல்நடு முடிவுஒன்று மின்றி யாவையுமாம்
முத்தர்கள் முத்தனே! முனிவனே! மூவா
துதிபுனை சேவடி விளக்கிடும் தொண்டர்கள்
திருஅருள் குறிப்பினைக் குறித்தனர், நின்றார்;
சுதமறு புலிமுனி அரமுனி ஏத்தத்
தூய பொன்னம்பலம் துலங்குற நடித்துஅங்கு
இதம் உயிர்க்கு இனிதுஅருள் அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 5.

பாலென மென்மொழிப் பாவையும் நீயும்
பரித்துஅன்பர் பழங்குடிற்கு எழுந்தருள் புரிய
சாலவும் தக்கது இக்காலம்; வெண்மதியும்
சாய்ந்தது; சங்கற்பத் தாரகை தொலைந்த;
கோலமார் குணதிசை வெளுத்தது; முக்கண்
குருமணியே! எங்கள் கோமளத் கொழுந்தே!
ஏலவார் குழலி யோடு அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 6

ஒற்றியூர் மேவிய ஒளிமணி வண்ணா!
உம்பர்கோன் நான்முகன் வம்புலாந் துளவக்
கொற்றவன் முன்னவா! முன்ஐவர் அர்க்கியங்கள்
கொண்டு நின்றார்; மறைக்குலம் எழுந்தார்த்த;
பற்றிலர்க்கு அருள் பராபர! எனையுடைய
பசுபதி! பழம்பொருள்! பாவநாசா! மன்
றில் தனி நடந்தரும் அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 7.

பிணக்குறு மதிபெறு கணக்கறு சமயப்
பித்தறு மாலைக்கண் சிற்றெழை யோர்கள்
வணக்குறு சிறுதலைவாயில் ஊன்மனை தோறு
உழலுபு சிறுதேவர் வழங்குறு பயிக்கம்
மணக்குறு பொருள்எனக் கொள்கின்றார்; அடியோம்
வள்ளல் நின்மலர்க்கழல் வான்பதம் பெறுவான்
இணக்குறு அன்பாம் பலியருள் அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 8.

காலன் ஆருயிர்கொள நீட்டிய பதத்தோய்!
கண்ணகல் ஞால மேல் காதலித்தவர்கள்
பால்அனார் அன்புண்டு பழமறை யேத்தப்
பண்ணவர் சிரந்தொடு வண்ண வாங்கழல்கள்
ஞாலமா மகள் முடிபுனைந்திடச் சூட்டி
நாயடி யோங்களுக்கு அருள்புரி நயப்பான்!
ஏலவார் குழலி யோடு அருட்பிரகாச!
எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 9.

மட்டவிழ் குழலியோர் பங்குடைத் தில்லை
வரதனே! ஒற்றிவாழ் மாணிக்க மலையே!
வட்டவார் சடைமிசை மதிக்கண்ணி வைத்த
மைந்தனே! முக்கண! மாசிலா மணியே!
பட்டனே! என்னைப் பரிந்து வந்தாண்ட
பனவனே! நவநிலை கடந்தருள் சைவ
அட்ட மூர்த்தி யாம் அருட்பிரகாச!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! 10.

மோனந் தவாத முனைவர் கான்முழைகள்
முற்றுணவற்று மேல் புற்றெழுந் தோங்கக்
கானந்த நின்றனர் கண்டனர்காண்; எங்
கடைச்சிறு நாய்க்கடைக் குங்கடையேன் எம்
பானந்தல் கேடிலாப் பாதம்மண் தாடவப்
பரிந்தருள் கொழித்து உவந்திருந்தருள் தில்லை
ஆனந்த நாடனே! அருட் பிரகாச!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .11

மந்திரம் கலைபதம் எழுத்து வான்புவனம்
மண்டிய கருவிகள் முற்றும் போய்நின்ற;
சுந்தரச் சேவடி இருநிலந் தோயத்
தூயமா தவங்கள் செய்தொழும்பு கொண்டருள்வான்
வந்தமானிட மணி! ஒற்றியூர் அமர்ந்த
வரத! மால் அயன் சிரமாட்டுறா அமல!
அந்தம் ஆதியும் இலா அருட்பிரகாச!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .12

ஏழையேன் செய்பிழை அனைத்தையும் பொறுத்துஎன்
இடர்ப்பிணி பொறாத என் எய்ப்பிலா வைப்பே!
ஊழிவானவர் பதம்நச் சுறா வண்ணம்
உயர்பொருள் விரித்த என்னுயிர்க்குயிரே! சீர்
வாழிஎன்று ஏத்தவாய் வலிது அருள்புரிந்த
மாணிக்கக் கூத்தனே! மறையவன் மகவான்!
ஆழியான் காணரும் அருட் பிரகாச!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .13

மறுத்த என்பிழை பொறுத்தருளி என்மடமை
வைக்க உட்பொறாதருள் வாய்மையான் வலிதே
உறத்தகு பிரணவத்து உண்மையை விரிக்க
உவந்தவ! ஒற்றியூர் உத்தம! நாயேன்
பெறத்தகு பேறினி அளித்திட நின்ற
பெருங்கருணைக் கடலே! முக்கண் மூர்த்தி!
அறத்தனி நாயக! அருட் பிரகாச!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .14

நினைப்பொடும் மறப்பெனும் உடுத்திகழ்கங்குல்
நிறைந்த மாயா உடல் பிரவஞ்சத்துள்ளே
தனித்திகழ் பழம்பொருள் விளக்கிய அடியார்
தத்துவ உளக்கடல் சாந்த மாமலைமேல்
நனித்திகழ் கழற்கதிர் உதயமாகுற, நாள்
நயந்தனர், நின்றனர், ஞாயிறும் வந்தான்
எனைத்தனி யாளுடை அருட் பிரகாச!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .15

======= “திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி” முற்றிற்று ========

                      –   தொழுவூர் வேலாயுத முதலியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *